சென்னையில் பின்லாந்து நிறுவனம் அலுமினிய வார்ப்பட தொழிற்சாலை

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (19:44 IST)
சென்னையில் பின்லாந்து நிறுவனம் அலுமினிய வார்ப்பட தொழிற்சாலை அமைக்கிறது!

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அலடிம்ஸ் என்ற நிறுவனம் சென்னைக்கு அருகே அலுமினிய வார்ப்பட தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலையில் மோட்டார் வாகன தொழிற்சாலைகளுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தேவையான தேவைப்படும் அலுமினிய வார்ப்பட உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும்.

பின்லாந்தில் இருந்து அந்நாட்டு அந்நிய நாடுகளுடனான வர்த்தக மேம்பாட்டு துறை அமைச்சர் டாக்டர் பாவா வெர்யன் தலைமையில் 30 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் குழு வந்துள்ளது. இதில் பின்லாந்தின் முன்னணி தொழில் அதிபர்கள் இருக்கின்றனர்.

இந்த தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக அலடிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராவ்டிலா பனு வந்துள்ளார்.

அவர் சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லி அருகே வெஸ்டாஸ் ஆர். ஆர்.பி இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மின் சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை இயந்திரத்தை தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டார்.

இந்த தொழிற்சாலையை பார்வையிட்ட பிறகு ராவ்டிலா பனு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நாங்கள் ஏற்கனவே அசோக் லேலண்ட்டுடன் கூட்டு சேர்நது தொழிற்சாலை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்டுள்ளோம். நாளை இந்த கூட்டு நிறுவனத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை சிப்காட் ஒதுக்கீடு செய்து விட்டது. இதில் ஆரம்பகட்டத்தில் 250 மில்லியன் ஈரோ முதலீடு செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில் 350 மில்லியன் ஈரோ முதலீடு செய்யப்படும். இந்த தொழிற்சாலை கட்டுமான வேலைகள் அடுத்த வருடம் தொடங்கும். உற்பத்தி 2009 ஆம் ஆண்டில் தொடங்கும்.

அசோக் லேலண்ட் டிரக் தயாரிப்பதற்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஷான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதனால் அலுமினிய வார்ப்பட பாகங்களுக்கு தேவை அதிக அளவில் உள்ளது. அத்துடன் இந்த தொழிற்சாலையில் தொலை தொடர்பு துறைக்கு தேவைப்படும் அலுமினிய வார்ப்பட உதிரிபாகங்களும் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

இந்த தூதுக்குழுவின் தலைவரான பின்லாந்து அமைச்சர் டாக்டர் வேரியன் கூறுகையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதில் 20 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நிறுவனம் தான் நோகியோ செல் போன் தயாரிக்கும் நிறுவனம். நோகியோவில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. நோகியோவிற்கு உதிரி பாகங்களை வழங்கும் பல நிறுவனங்கள் சென்னையில் தொழிற்சாலை அமைக்க முதலீடு செய்ய உள்ளன.
தற்போது நாங்கள் மின்உற்பத்தி செய்யும் காற்றாலை தயாரிக்க பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை பற்றி ஆராய வந்துள்ளோம் என்று கூறினார்.

விஷ்டாஸ் நிறுவனத்தின் துணை மேலான்மை இயக்குநர் சர்வேஷ் குமார் கூறுகையில், நாங்கள் தயாரிக்கும் காற்றாலைகளில் இறக்குமதி செய்யப்பட்ட கியரை பயன் படுத்துகின்றோம். இந்த தூதுக்குழு காற்றாலைகள் இயங்குவதை பற்றி அறிவதற்காக வந்துள்ளது. பின்லாந்தில் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய காற்றாலைகளை அமைப்பதற்கு, இந்த துறையில் எங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தை பின்லாந்துடன் பகிர்ந்து கொள்வோம் என்று கூறினார்.


வெப்துனியாவைப் படிக்கவும்