உயர் ரக அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்!
உயர் ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது.
பாஸ்மதி ரகம் அல்லாத மற்ற உயர் ரக அரிசி ஏற்றுமதி செய்ய கடந்த 9ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இதனை ஏற்றுமதியாளர்களும், விவசாயிகளும் கடுமையாக எதிர்த்தனர்.
மேலும் அரசின் ஏற்றுமதி தடை உள்நாட்டு சந்தையில் விலை குறைப்பும், கள்ளச் சந்தை வணிகத்தையும் தான் உருவாக்கும் என்று அதிருப்தி எழுந்தது.
இதனிடையே இப்பிரச்சனை குறித்து கடந்த வாரத் தொடக்கத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவாரும், வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத்தும் ஆய்வு மேற் கொண்டனர்.
அக்டோபர் 10ஆம் தேதிக்கு முன்னதாக ஏற்றுமதிக்காக துறைமுகங்களுக்கு கொண்டு வரப்பட்ட அரிசிக்கு இந்த தடை கிடையாது என நேற்று கமல்நாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ்முன்ஷி, டன்னுக்கு 425 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அல்லாத உயர் ரக அரிசி ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்வது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நெல் விலையும் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.