பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (18:41 IST)
கால் நடைகளுக்கான தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டு்ம் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் திருச்சி பெரம்பலூர் கரூர் மற்றும் புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கே.ஏ. செங்குட்டுவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

இந்த கூட்டத்தில் கால்நடைகளுக்கான தீவனத்தின் விலை அதிகரித்துள்ளதால், பசும்பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.12 இல் இருந்து ரூ.16 ஆக உயத்த வேண்டும். எருமை மாட்டின் பால் விலையை லிட்டருக்கு ரூ.14 இல் இருந்து ரூ.22 ஆக அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தென் மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கால் நடைக்கான தீவனத்திற்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளதற்கு கவலையை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 9,600 பால் கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. இவை தற்போது 7,500 சங்கங்களாக குறைந்து விட்டன. இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து பால் ஊற்றியவர்கள், தனியார் பால் விற்பனை நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அதிக விலை கொடுப்பதுடன், இதர சலுகைகளும் வழங்குகின்றன என்று கூறினார்.

இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். ி. ராஜேந்திரன் பேசுகையில், அரசு மாதிரி கூட்டுறவு சட்டத்தை கொண்டு வர வேண்டும். கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். இதன் ஊழியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி பால் கொள்முதலுக்கான நிலுவை தொகையை பால் ஊற்றுபவர்களுக்கு, உடனடியாக வழங்க வேணடும் என அறிவுறுத்த வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்