எஸ்.பி.ஐ.யின் முதலீடு பாதுகாப்பு நிதி

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (10:46 IST)
பாரத ஸ்டேட் வங்கியின் பரஸ்பர நிதியம் முதலீடு பாதுகாப்பு பரஸ்பர நிதியை நேற்று வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.ஐ கேப்பிடல் புரடக்சன் பண்டி 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த பரஸ்பர நிதியில் குறைந்த பட்சம் ரூ. 5,000 முதலீடு செய்ய வேண்டும். இதில் நவம்பர் 23 ந் தேதி வரை முதலீடு செய்யலாம்.

இதில் திரட்டப்படும் நிதி கடன் பத்திரங்கள், நிதி சந்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இது ஐந்து வருட முதலீடு திட்டம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு 5 வருடங்களுக்கு பிறகு முதலீட்டுடன் வருவாயும் சேர்த்து வழங்கப்படும். இந்த பரஸ்பர நிதியை நிதி சேவை ஆய்வு நிறுவனமான கிரிசில் மூன்று ஏ பாதுகாப்பு என மதிப்பிட்டுள்ளது.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்டின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ். சகாபுதின் கூறுகையில் இதில் முதலீடு செய்வபர்களுக்கு அவர்கள் செய்யும் முதலீடு அதிக ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக இருக்கும். முதலீட்டார்களின் நிதிக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் எங்களி்ன் முதல் இலக்கு. இதற்கு தகுந்தாற்போல் புதிய பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

தற்போது பங்குச் சந்தையில் தினமும் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கின்றது. இதனால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதை கருதியே இந்த பரஸ்பர நிதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் திரட்டப்படும் நிதி பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

தற்போது பரஸ்பர நிதியில் முதலீடு செய்பவர்களில் அதிகம் பேர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டத்தின் கீழ் உள்ள பரஸ்பர நிதிகளிலேயே முதலீடு செய்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் திட்டத்தின் பரஸ்பர நிதியில் முதலீடு செய்கின்றனர் என்று கூறினார்.

எஸ்.பி.ஐ கேப்பிடல் புரடக்சன் பண்டி 1 இல் திரட்டப்படும் நிதிக்கு சுமார் 9.25 விழுக்காடு வருவாய் கிடைக்கும் என்று எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்