நலிந்த கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.4,850 கோடி : சிதம்பரம்

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (10:56 IST)
மத்திய அரசு நலிந்த கூட்டுறவு வங்கிகளை சீரமைக்க ரூ. 4,850 கோடி ஒதுக்கியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மத்திய அரசு நலிந்த கூட்டுறவு வங்கிகளை சீரமைக்க தேவையான ஆலோசனைகளை வழங்க பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.
மாநில அரசுகள் வைத்தியநாதன் தலைமையிலான குழுவின் பரிந்துரையை அமல் செய்துள்ளதை பற்றி பரிசீலிக்க மாநில கூட்டுறவு அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நலிந்த நிலையில் உள்ள கூட்டுறவு வங்கிகளை புனரமைப்பதற்காக குறுகிய கால உதவியாக ரூ. 4,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடே கூட்டுறவு வங்கிகள் மீண்டும் இலாபகரமாக சயல்படுவதற்கு போதுமானது. இது தற்போதுள்ள நிதி நிலைமையிலும், மாநில அரசுகளின் ஆற்றலுக்கும் போதுமானது.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரைகளில் எட்டு அல்லது ஒன்பது பரிந்துரைகள் தவிர மற்ற பரிந்துரைகளை மாநில கூட்டுறவு அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குறுகிய கால கடன் சீரமைப்பு மற்றும் நீண்ட கால கடன் சீரமைப்பு பற்றி பேராசிரியர் வைத்தியநாதன் குழு கொடுத்துள்ள பரிந்துரைகளில் மத்திய அரசுக்கும் மாநில கூட்டுறவு அமைச்சர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை ஆராய சிறு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல மாநில அரசுகள் கூட்டுறவு வங்கிகளை சீரமைக்க அவசர சட்டங்களையும் அறிவித்துள்ளன. சில மாநில அரசுகள் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன. இந்த மாநில அரசுகள் வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி நிதி உதவி பெறலாம்.

மாநில அரசுகள் குறுகிய கால கடனுக்கும், நீண்ட கால கடனுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக கூறுகின்றன. ஆனால் இரண்டு வகை கடன்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்று சிதம்பரம் கூறினார்.

பேராசிரியர் வைத்தியநாதன் குழு நலிந்த கூட்டுறவு வங்கிகளை சீரமைப்பதற்கான நிதியை மத்திய அரசு, மாநில அரசு, கூட்டுறவு வங்கிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த குழு 16 பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்