அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி்ன் மதிப்பு அதிகரித்திருப்பதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39 வரை குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள், அந்நிய நாடுகளுக்கு அனுப்பும் சரக்குகளுக்கு கிடைக்கும் வருவாயும் குறைந்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் ஏற்றுமதி தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்தனர். தங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்ய வேண்டும் என ஏற்றுமதியாளர்களின் வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
ஏற்றுமதியினால் கிடைக்கும் அந்நியச் செலவாணி குறைந்தால், அது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என நிபுணர்களும் எச்சரித்தனர்.
இதனால் மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி கப்பலில், விமானத்தில் சரக்கை ஏற்றுவதற்கு முன்னரும், ஏற்றிய பின்னரும் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான வட்டி குறைப்பு நீடிக்கப்பட்டு உள்ளது.
முன்பு இந்த சலுகை டிசம்பர் 2007 வரை மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த சலுகை 2008 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் வங்கி கணக்கில் அந்நியச் செலவாணியாகவே வைத்திருக்கும் 10 லட்சம் டாலர் வரையிலான இருப்புக்கு வட்டி தர அரசு அனுமதியளி்த்துள்ளது. இந்த வட்டி விகிதம் எவ்வளவு என்பது வங்கிகளால் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இருப்பு ஒரு ஆண்டு வைப்புத் தொகையாக இருக்க வேண்டும். இந்த வட்டி வழங்கும் திட்டம் 2008 அக்டோப்ர 31 ந் தேதி வரை அமலில் இருக்கும்.
அரசு நிர்ணயித்துள்ள வட்டி விகிதத்தைவிட 4.5 விழுக்காடு குறைவாகவே ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி வசூலிக்கப்படும்.
இந்த வட்டி சலுகை கைத்தறி, சணல், தரை விரிப்பு, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள், புண்ணாக்கு, பதப்படுத்தப்பட்ட முந்திரி, காபி மற்றும் தேயிலைக்கும் வழங்கப்படும்.
ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் ஏழு விதமான சேவை வரிகள் திருப்பி வழங்கப்படு்ம். முன்பு 4 விதமான சேவை வரிகள் திருப்பி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது புதிதாக முன்று சேவை வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது காப்பீடு, தொழில் நுட்ப ரீதியான சோதனை மற்றம் பகுப்பாய்வு செய்ய செலவிட்ட தொகை, சரக்குகளை ஆய்வு செய்யவும், தரச் சான்று பெறுவதற்காகவும் செலவிட்ட தொகை ஆகியவை புதிதாக திருப்பிதரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் துறை முகம், விமான நிலையம், சாலைப் போக்குவரத்து, ரயில்வே ஆகியவை மூலம் சரக்கு கொண்டு செல்ல செலவிடப்படும் கட்டணத்திற்கு செலுத்தும் சேவை வரி ஆகியவை திருப்பி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.