தொழில் வளர்ச்சிக்கு தகுந்தாற் போல், உலகத் தரத்துடன் உட்கட்டமைப்பு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப் படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரம் சிப்காட் தொழிற் பேட்டையில் காப்ரோ இந்தியா நிறுவனம், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த அயல்நாடு வாழ் இந்தியரான லார்ட் சுவராஜ் பால் நிறுவிய காப்ரோ குழுமத்தின் துணை நிறுவனமான காப்ரோ இந்தியா நிறுவனத்தின் சார்பில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கபட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து, முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். இதில் எனது தலைமையிலான நடவடிக்கை குழுவில் தொழில் அதிபர்கள், வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புகள் தெரிவித்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் அதிபர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்.
தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, உலக தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும்.
தமிழகத்தில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கோயம்பேடு - மதுரவாயல் - சுங்குவார் சத்திரம் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும். மாநில அரசு, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து இந்த சாலை 6 வழிபாதையாக மாற்றும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், காப்ரோ போன்ற நிறுவனங்கள், வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த பகுதியின் மேம்பாடு, உள்ளூர் மக்களின் எதிர்பார்புக்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும். இந்த வெற்றியில் அவர்களின் பங்கும் இருக்க வேண்டும். இந்த பகுயில் உருவாகும் புதிய வேலை வாய்ப்புகள், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த தொழிற்சாலையை விரைவில் அமைத்த காப்ரோ குழுமத்தை பாராட்டிய முதல்வர் கருணாநிதி, இந்த குழுமம் மாநில அரசு பின்தங்கிய பகுதிகளை தொழில் மயமாக்க அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதியான திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டையில் காப்ரோ நிறுவனம் கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த தொழிற்சாலை தொடங்குவதற்காக நிலக்கோட்டையில் சிப்காட் 20 ஏக்கர் நிலம் வழங்க அனுமதி அளித்து உள்ளது. தமிழக அரசு இதற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கும்.
கடந்த வருடம் மே மாதம் எங்கள் அரசு பொறுப்பேற்ற பின், காப்ரா நிறுவனம் உட்பட தமிழ்நாட்டில் ரூ 11 ஆயிரத்து 83 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 11 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 இலட்சத்து 25 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள், இது மட்டுமல்லாமல் மேலும் பல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வர உள்ளன என்று கூறினார்.
காப்ரோ குழுமத்தின் சேர்மன் லார்ட் சுவராஜ் பால், தமிழக அதிகாரிகள் தேவையான உதவிகள் செய்ததை பாராட்டினார்.