பங்குச் சந்தை வளர்ச்சியா ? வீக்கமா ? சிறு முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (12:59 IST)
பங்குச் சந்தையில், அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் டாலர்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. பங்குகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கிறது. தினமும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ஏறுமுகமாகவே இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமானதாக இருக்கின்றது. இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கியும், முதலீடு செய்தும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டன. உலக அரங்கில் இந்தியா அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது.

இதனுடைய தாக்கம்தான், அந்நிய நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றன. தொழில் துவங்குகின்றன. இவை எல்லாம் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம்தான்.

இவ்வாறு தான் நமது அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள் கருத்தரங்குகளில் செய்தியாளர்களிடம் கூறிவருகின்றனர்.

இதே அமைச்சர்களும், அதிகாரிகளும் திகைத்துப் போகும் அளவிற்கு பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு குவியத் தொடங்கிவிட்டது.

அதுவும் கடந்த பத்து நாட்களில் வரலாறு காணாத அளவு, நிதி பண்டிதர்களே திகைக்கும் அளவிற்கு குறியீட்டு புள்ளிகள் சிகரத்தை நோக்கி உயர்ந்து கொண்டுள்ளன.

இது இந்திய பொருளாதார வளர்ச்சியின் மீது உள்ள நம்பிக்கையா அல்லது தாக்குதலா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.

நமது மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பகிரங்கமாகவே சிறுமுதலீட்டாளர்களை எச்சரித்துள்ளார்.

அவர், பங்குச் சந்தையில், இப்போதுள்ள நிலவரத்தில் சிறு முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதே நல்லது. சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பதே நல்லது. பங்குகளை பற்றி ஆராய முடியாதவர்கள், பரஸ்பர நிதிகள் மூலம் பங்குச் சந்தையில் பங்கு பெறுவதே நல்லது என்று எச்சரித்துள்ளார்.

நிதி அமைச்சர் சிதம்பரத்தைப் போலவே, பல நிபுணர்களும் எச்சரிக்கை செய்ய துவங்கிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்