வணிக முத்திரை, பெயரை பயன்படுத்துதல் : உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:33 IST)
ஒரு நிறுவனத்தின் வணிக முத்திரை, பெயர் ஆகிவற்றை மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் வேறு வகை பொருட்களுக்கோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவை தயாரிக்கும் பொருட்களை வணிக முத்திரையுடன் விற்பனை செய்கின்றன. இவை பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், அவைகளின் மீது வணிக முத்திரையை அச்சடிக்கின்றன அல்லது வேறு வகையில் பெயரை அச்சிடுகின்றன. இந்த பெயர்களும் குறிப்பிட்ட வடிவத்தில், நிறத்தில் இருக்கும்.

உதாரணமாக விம்கோ நிறுவனம் தயாரிக்கும் தீப்பெட்டியை, வெட்டும் புலி சின்னத்தில் விற்பனை செய்து வருகிறது. தீப்பெட்டியை வாங்கும் பொதுமக்கள், ஏதாவது ஒரு தீப்பெட்டியை வாங்காமல், அதன் தரத்திற்காகவே வெட்டும் புலி தீப்பெட்டி என்று கேட்டு வாங்குகின்றனர். யாரும் விம்கோ நிறுவனத்தின் தயாரிப்பு தீப்பெட்டி என்று கேட்டு வாங்குவதில்லை.

இதே போல் குண்டடூசியில் இருந்து விமானம் வரை, முத்திரை சின்னத்தை பதித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த முத்திரை சின்னத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள், அதை பதிவு செய்கின்றன. இதை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று முத்திரை பதிவு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு நிறுவனத்தின் வணிக முத்திரையை, பெயரை மற்ற நிறுவனங்கள் வேறு பொருட்களுக்கு பயன்படுத்துகின்றனர். உதாரணமாக விம்கோ நிறுவனத்தின் தீப்பெட்டி வணிக முத்திரையான வெட்டும் புலியை, தேயிலை தூள், காபி தூள் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தலாம். இதே போல் புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு, பதிவு செய்துள்ள வணிக முத்திரை, பெயர் ஆகியன அந்த குறிப்பிட்ட பொருளுக்குதான் செல்லுபடியாகும், மற்ற பொருளுக்கு பயன்படுத்துவது சட்டம், விதி மீறல் ஆகாது என வாதம் செய்யப்பட்டு வந்தது.

குஜராத் உயர்நீதிமன்றம், ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ள வணிக முத்திரை, அல்லது பெயரை மற்றவர்கள் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு :

குஜராம் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கின்ற கெய்ரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையமும் சேர்ந்து ஆனந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தன. அமுல் சாசம்ஹார், அமுல் கட்பீஸ் ஸ்டோர் ஆகிய இரு கடைகளின் உரிமையாளர்கள் மீது, முத்திரை பதிவு சட்டத்தை மீறியதாக கூறி வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 25 ந் தேதி தீர்ப்பளித்தது. இதில் இரண்டு கடை உரிமையாளர்களும், அமுல் வர்த்தக சின்னத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளனர் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அமுல் சாசம்ஹார் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று கூறி, அமுல் சாசம்ஹார் செய்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி டி.என் படேல் தனது தீர்ப்பில், பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை, வர்த்தக சின்னம் ஆகியவைகளை, அதற்கு தொடர்பு இல்லாதவர், அல்லது அனுமதி பெறாதவர் பயன்படுத்துவது தவறானது. பார்ப்பதற்கு பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரை போன்றே, மற்றவர்கள் பயன்படுத்துவதும் தவறானது. வேறு நிறுவனத்தின் பெயரையோ அல்லது வணிக முத்திரையையோ நீண்டகாலமாக பயன்படுத்தி வருவதாலேயே, அது சட்டப்படி சரியானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பால், புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயரையோ, அல்லது வணிக முத்திரையையோ, இதில் தொடர்பில்லாத மற்றவர்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும். இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு சட்ட விரோதமாக, மற்ற நிறுவனங்களின் பெயரையும், முத்திரையையும் பயன்படுத்தி வருவது, பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இந்த தீர்ப்பால் எதிர்காலத்தில் சட்ட, விதிமுறைகளுக்கு எதிராக பயன்படுத்தும் போக்கு தடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்