டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இந்திய ஏற்றுமதியாளர்களை பலவிதங்களிலும் பாதித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து ஏற்றுமதியாளர்களை காப்பாற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் தொடர்ந்து வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்.
இதற்கிடையில் ஏற்றுமதியாளர்கள் ரிசர்வ் வங்கி கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.கே. குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
அமெரிக்க மத்திய வங்கி அரை விழுக்காடு வட்டியை சென்ற வியாழக்கிழமையன்று குறைத்தது. இதே மாதிரி அடுத்த மாதம் மீண்டும் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பாதிப்பில் இருந்து ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதால், வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில், வர்த்தக துறையினருக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடியும்.
வங்கிகள் வட்டி விகிதத்தை 2 முதல் இரண்டரை சதவிதம் வரை உயர்த்தி உள்ளன. இந்த உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும்௦ 4.5 விழுக்காடு வட்டி சலுகையின் பலன்கள் கிடைக்கவில்லை.
இந்த நெருக்கடியில் இருந்து ஏற்றுமதியாளர்கள் மீள்வதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு சென்ற ஜூன் மாதம் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தது. இந்த சலுகைகளில் பெரும் பாலனவை அமல்படுத்தவில்லை. இந்த சலுகைகள் எல்லாம் அறிவிப்போடு சரி, அமல் படுத்த எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. இதனால் ஏற்றுமதியாளர்கள் சிறிய அளவிலேயே பலனடைந்துள்ளனர்.
ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு செலுத்திய வரிகளை திருப்பி வழங்குவது, வட்டி சலுகையின் கீழ் செலுத்திய வட்டியை திருப்பி வழங்கும் சலுகையின் கீழ், இவை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. சேவை வரி சலுகையும் முழுமையாக வழங்கவில்லை.
துறைமுக கட்டணத்தின் மீதான சேவை வரி, துறைமுகத்திற்கு ஏற்றுமதி செய்ய சரக்குகளை கொண்டு செல்வதற்கு செலுத்தப்படும் போக்குவரத்து கட்டணத்திற்கான சேவை வரி ஆகியவை மட்டும், திருப்பி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரி, சேவை வரிகளை திரும்பி வாங்குவது மிகுந்த கஷ்டமானதாகவும், நிர்வாக செலவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுப்பதாகவும் இருக்கின்றது. எனவே ஏற்றுமதியாளர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று குப்தா கூறியுள்ளார்.