சேவை வரி மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி வருமானம்

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (15:15 IST)
நாடு முழுவதும் சேவை வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ. 50 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்ததாக ஈரோட்டில் மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை உதவி ஆணையாளர் பால்முகமது பேசினார்.

ஈரோட்டில் ஈடீசியா சார்பில் நேற்று மத்திய அரசு கடந்த ஜுன் மாதம் முதல் அமல்படுத்தியுள்ள கட்டிட வாடகை மற்றும் கான்ட்ராக் வேலைகள் மீதான சேவை வரி பற்றிய விளக்க கூட்டம் நடந்தது. எடீசியா தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார்.

மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரித்துறை, ஈரோடு சரக உதவி ஆணையாளர் பால்முகமது பேசியதாவது: சேவை வரி செலுத்துவது பிற நாடுகளில் தொடக்கத்தில் இருந்தே உள்ளது. நமது நாட்டில் கடந்த 94ம் ஆண்டில் மூன்று வகையான சேவை வரிகள் கொண்டுவரப்பட்டது.

இன்று 106 வகையான சேவை வரிகள் உள்ளது. கடந்த 2006-2007ம் நிதியாண்டில் சேவை வரி மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்தது.ஈரோட்டை பொறுத்தவரை டெலிஃபோன், லாரி வாடகை, கட்டுமான வரி ஆகிய மூன்றும் முக்கியமானதாக உள்ளது. கடந்த ஜுன் முதல் வாடகை வரியை மத்திய அரசு கொண்டு வந்தது.

ஆடிட்டர் முரளிதரன் பேசியதாவது: மத்திய அரசுக்கு சேவை வரிகள் மூலம் ரூ. 2.5 லட்சம் கோடி வருமானம் கிடைக்கிறது.
கலால் மற்றும் சுங்கத்துறை மூலம் ரூ. 5 லட்சம் கோடியும் கிடைக்கிறது. இதை விட தற்போது வளர்ந்து வரும் சேவை வரி மூலம் 50 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் தவிர மத்திய அரசுக்கு ரூ. ஒன்றரை லட்சம் கோடி துண்டு விழுகிறது. மத்திய பட்ஜெட்டில் துண்டுவிழுவதால், அரசு கடன் வாங்க வேண்டியதுள்ளது. உலகளவில் நமது நாடு அதிக கடன் வாங்கும் நாடாக உள்ளது.

கூலி 60 சதத்துக்கு 2 சதவீத வரி செலுத்தினால் போதுமானது. கட்டுமான ஒப்பந்ததாரர்கள் யாரும் வரி செலுத்துவதில்லை. "வாட்' வரியில் பொருட்கள் வாங்கினால், அதற்கு சேவை வரி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்