தோஹா பேச்சு தோல்வி : புஷ் வருத்தம்!

Webdunia

வெள்ளி, 22 ஜூன் 2007 (19:39 IST)
சர்வதேச அளவில் தடையற்ற வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்காக துவக்கப்பட்ட தோஹா வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்!

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பேச்சாளர் டோனி ஃபிராட்டோ, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் கடுமையான நிலைப்பாட்டால் ஜெர்மனியில் நடந்த உலக வர்த்தக விரிவாக்கப் பேச்சுவார்த்தைகள் தோற்றதென கூறியுள்ளார்.

சிறிய மற்றும் முன்னேறிவரும் ஏழை நாடுகள் உலக வர்த்தகத்தில் முன்னேறுவதற்கு தடையாக பிரேசில், இந்தியா போன்ற பெரும் பொருளாதார நாடுகள் நடந்து கொண்டதே பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என்று ஃபிராட்டோ கூறியுள்ளார்.

ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விட்டுக் கொடுத்துதான் பேசியது என்றும், ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதன் நலன்களை விட்டுத்தர முடியாது என்று ஃபிராட்டோ கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகள் தங்களது விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கும் வழங்கிவரும் மானியத்தை குறைத்தால் மட்டுமே சர்வதேச அளவில் சமச்சீரான வர்த்தகம் ஏற்படும் என்று இந்தியாவும், பிரேசிலும் வலியுறுத்தின. இதுவே போட்ஸ்டாம் பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி சூசன் ஸ்வாப் கூறியிருந்தார்.

போட்ஸ்டாமில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட ஜி-4 நாடுகள் விவசாய மானியப் பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழிலகங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியின் தலைமைப் பொதுச் செயலர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார். (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்