தீபாவளியை முன்னிட்டு டிவி, ஏசி உள்ளிட்ட நுகர்பொருட்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் - ஸ்டேட் பாங்க் அறிவிப்பு

வியாழன், 10 அக்டோபர் 2013 (17:20 IST)
தீபாவளியை முன்னிட்டு கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், எல்சிடி, டிவி, ஏ.சி. மெஷின்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் வாங்க குறைந்த வட்டி கடன் திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது.
FILE

சிறப்பு வட்டி குறைப்பு சலுகைகளை பிஎன்பி, ஓபிசி, ஐடிபிஐ போன்ற வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன. அவற்றைத் தொடர்ந்து தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் அறிவித்துள்ளது.

குறைந்த வட்டியில் பொதுமக்களுக்கு கடன்கள் கொடுக்க கூடுதல் நிதியை பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்க மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தது. இதன்படி, வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பண்டிகை கால சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டங்களை வங்கிகள் ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன.

கார் கடன் வட்டியில் 0.20% குறைத்து 10.55% ஆக்கியுள்ளது. இதற்கு முன்பு வட்டி விகிதம் 10.75 ஆக இருந்தது. கடன் தொகையில் 0.51 % ஆக உள்ள நடைமுறை கட்டணத்தில் குறைந்தபட்சமான ரூ.1,020ல் இருந்து ஒரே அளவாக ரூ.500 என்று குறைத்துள்ளது.

மாத சம்பளம் வாங்குபவர்கள்,...

மாத சம்பளம் வாங்குபவர்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு கார், பைக், பிரிட்ஜ் உள்ளிட்ட நுகர்பொருள்கள் வாங்க விழாக்கால கடன்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வட்டி விகிதம் 12.05லிருந்து தொடங்குகிறது. கடன் திட்டம் அக்டோபர் 7ம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் (ஐஓபி) நுகர்வோர் கடன் திட்டங்களுக்கான வட்டியில் 2 சதவீதம் குறைத்துள்ளது. நடைமுறையில் உள்ள 15.25 சதவீதத்தில் இருந்து 13.25 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக வங்கி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. நுகர்வோர் கடன் திட்டங்களில் வட்டி குறைப்பு, எளிய நிபந்தனைகள் உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்துள்ளது.

எஸ்பிஐ உள்பட பல அரசு வங்கிகள் குறைந்த வட்டி கடன் திட்டத்தை அறிவித்துள்ளன. கார், பைக் மற்றும் டி.வி, ஏசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடன் மீதான வட்டி 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளன. வட்டி 2 சதவீதம் குறைவதால் கடன் தொகைக்கு செலுத்த வேண்டிய மாத இஎம்ஐ தொகை 13 முதல் 15 சதவீதம் குறையும்.

குறிப்பாக 5 வருடங்களுக்கு கார் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகையில் ரூ.400 முதல் ரூ.500 வரை குறையும். இதுவே, 3 வருடங்களுக்கு கார் கடன் பெற்றால் மாதந்தோறும் ரூ.1,000 வரை குறையும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்