தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு- ரிசர்வ் வங்கி அதிரடி!

செவ்வாய், 23 ஜூலை 2013 (10:23 IST)
FILE
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கவும் தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

இதனால் தங்கத்தின் விலை உயரும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். தங்கம் உயரும் என்று இவர்கள் தெரிவிப்பது அச்சம் அல்ல. விலையை உயர்த்துவோம் என்று பொருள் கொள்ளவேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்திற்கெல்லாம் காரணம் இந்த தங்கத்தின் மீதான மோகமே காரணம்.

உலகிலேயே இந்தியாவில் தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் குறைந்த அளவே தங்கம் கிடைப்பதால், தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்காகவும், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்காகவும் அதிக அளவில் அன்னிய செலாவணி செலவிடப்படுவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஆகும் தொகைக்கு இடையேயான வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை எனப்படுகிறது. கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 4.8 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதனால் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததும் ஒரு காரணம் என்று கருதும் மத்திய அரசு, தங்கம் வாங்குவதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளது. என்றாலும் தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கவே விரும்புகிறார்கள்.

இந்த நிலையில், தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

அதன்படி,

வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும் அனைத்து வங்கிகளும், அதிகாரம் பெற்ற ஏஜென்சிகளும் தாங்கள் இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஏற்றுமதிக்காக ஒதுக்கவேண்டும். மேலும் அதே அளவு தங்கத்தை சுங்கத்துறையிடம் இருப்பு வைக்க வேண்டும்.

இந்த தகவலை செய்திக்குறிப்பு ஒன்றில் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டின் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

“இறக்குமதி செய்யும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்வது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி கூறி இருப்பதால், எந்த விலைக்கும் தங்கத்தை ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இறக்குமதியாளருக்கு ஏற்பட்டு உள்ளது.

எனவே ஏற்றுமதியில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் விற்கும் தங்கத்தின் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்” என்று மும்பை தங்க வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஹண்டியா தெரிவித்தார்.

தங்கத்தின் விலை அதிகரிப்பதே நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது. அப்போதுதான் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் மோகத்தை கட்டுப்படுத்த முடியும். மற்ற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதே நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது.

இதுபோன்று தங்க மோகத்தில் வீழ்ந்த மேலை நாடுகளில் பல இப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விற்க வேண்டி வந்ததால்தான் தங்கத்தின் விலை சமீபத்தில் கடும் சரிவு கண்டது.

ஆகவே தங்கம் என்பது ஒருசில செல்வந்தர்களின் பணம் சம்பந்தப்பட்ட விஷயம், வியாபாரிகளின் கொள்ளை சம்பந்தப்பட்ட விஷயம். இவர்களிடம் அதிகபட்ச வரியை வசூலிக்கவேண்டும், அப்போதுதான் பெட்ரோல் விலையையே குறைக்க் முடியும். அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும்.

எனவே ரிசர்வ் வங்கி இதோடு மட்டும் நில்லாது மேலும் சில கிடுக்கிப்பிடி திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்