ஏர்டெல், ஐடியா செல்போன் கட்டணம் 100 சதவீதம் உயர்ந்தது!
வியாழன், 24 ஜனவரி 2013 (10:13 IST)
FILE
செல்போன் கட்டணங்களை 100 சதவீதம் அளவுக்கு அதிரடியாக அதிகரித்துள்ளது ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள். இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, வேறு செல்போன் நிறுவனங்களுக்கு தாவ முடிவு செய்துள்ளனர்.
செல்போன் இல்லாதவர்களையே பார்க்க முடியாத அளவுக்கு நமது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில், செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பலத்த அடியாக, நாட்டின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் செல்போன் கட்டணத்தை ஏறத்தாழ 100 சதவீதம் அளவுக்கு அதிரடியாக அதிகரித்து உள்ளனர்.
ஏர்டெல் நிறுவனம் ஒரு அழைப்புக்கான கட்டணத்தை 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக உயர்த்தி உள்ளது. ஐடியா நிறுவனமும், வினாடிக்கு 1.2 காசாக இருந்த கட்டணத்தை 2 காசாக அதிகரித்து உள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செலவினங்கள் அதிகரித்து வருவதாலும், கடந்த 3 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாததாலும் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு, நாடு முழுவதிலும் உள்ள 22 தொலைத்தொடர்பு மண்டலங்களிலும் இந்த கட்டண உயர்வு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனம் இலவச நிமிடங்களை நான்கில் ஒரு பங்காக குறைத்து விட்டதாகவும், முன்கூட்டியே பணம் செலுத்தும் (பிரீபெய்ட்) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாப் அப் வவுச்சர்களின் விலையை 5 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக அதிகரித்து இருப்பதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்கள் செல்போன் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. கட்டண உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அதை கட்டுப்படுத்துவதற்கு டிராய் அமைப்பு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த மாதத்தில் பார்தி ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் 2ஜி சேவைக்கான கட்டணங்களை உயர்த்தி இருந்தது. ஏர்டெல் தனது ஐ ஜி பி டேடா திட்ட கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தி இருந்தது. இந்த கட்டணம், ஒரு எம்.பி.க்கு 2 முதல் 3 காசுவரைதான் உயர்த்தப்பட்டு இருப்பதாக, ஏர்டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வோடா போன் நிறுவனமும், மாதாந்திர திட்டங்களில் இதே போன்ற மாற்றங்களை செய்துள்ளது. பிரீபெய்ட் திட்டங்களுக்கு டேடா வரம்பு குறைக்கப்பட்டு உள்ளது. ரூ.95க்கான (28 நாட்கள்) திட்டம் தற்போது ரூ.124க்கு கிடைக்கிறது. மற்ற திட்டங்களுக்கு 250 மற்றும் 150 எம்.பி. டேட்டா பயன்பாடுகள் முறையே 150 மற்றும் 100 எம்.பி.யாக குறைக்கப்பட்டு இருக்கிறது.