மெட்விடேவ் வருகையின் போது இந்தியா – இரஷ்யா அணு சக்தி ஒப்பந்தம்?

செவ்வாய், 21 டிசம்பர் 2010 (15:04 IST)
FILE
அமெரிக்கா, ஃபிரான்ஸ், சீனா தலைவர்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தரவுள்ள இரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்விடேவ், அமெரிக்காவைப் போல இரஷ்யாவுடனும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு இந்தியாவை வற்புறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நட்பு நாடாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் சிதைந்ததற்குப் பிறகு, இதர நாடுகளைப் போல் இந்தியாவின் மற்றுமொரு வணிகக் கூட்டாளியாகிவிட்ட இரஷ்யா, இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்களை விற்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்திய விமானப் படைக்கு பன்முகத் திறன் கொண்ட சண்டை விமானங்கள் 126 வாங்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்ற அமெரிக்காவின் போயிங், லாக்கீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடுகின்றன. இந்தியாவின் தேவைக்கு தங்களுடைய சமீபத்திய தயாரிப்பான மிக்-35 அதி நவீன சண்டை விமானங்கள் மிகப் பொருத்தமானது என்று இரஷ்யாவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா வரும் மெட்விடேவ், மிக்-35 விமானங்களுக்கு ஒப்பந்தம் பெறுவதில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டுமின்றி, கூடங்குளத்தில் நிறுவியுள்ளது போல், மேலும் பல 1,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளை அமைக்க இந்தியாவோடு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயினும், இந்தியாவின் கப்பற்படைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கோர்ஸ்கோவ் விமான தாங்கி கப்பலை தயாரித்துத் தருவதில் இரஷ்யா தாமதித்துவருவது அதற்கு எதிரான ஒரு நிலையை டெல்லியில் ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியா, இரஷ்யா இடையே இராணுவ ரீதியிலான ஒப்பந்தங்களுக்கு தடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது 4,500 மெகா வாட்டாக இருக்கும் இந்தியாவின் அணு மின் சக்தி உற்பத்தித் திறனை 2032ஆம் ஆண்டிற்குள் 63,000 மெகா வாட்டாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது இலக்கானால், இரஷ்யாவிடமிருந்து மேலும் பல அணு உலைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம், மெட்விடேவின் வருகையின் போது கையெழுத்தாகும் சாத்தியம் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்