பணவீக்கம் மார்ச்சில் 5.5% ஆக குறையும்: பிரதமர் நம்பிக்கை

திங்கள், 20 டிசம்பர் 2010 (14:50 IST)
நவம்பர் மாதத்தில் 7.48 விழுக்காடாக குறைந்துள்ள ரூபாயின் பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதியில் 5.5 விழுக்காடாக குறையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 83வது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “பணவீக்கம் இன்னமும் ஒரு கவலையாகவே உள்ளது. இப்போது குறைய ஆரம்பித்துள்ள பணவீக்கம், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 5.5 விழுக்காட்டிற்குக் குறைந்து நிலைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 8.5 விழுக்காடாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

தொழிலக, விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தின் மொத்த விலைகளையும் அடிப்படையாகக் கொண்ட மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் பணவீக்கம் நவம்பர் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தை விட சற்றேறக்குறைய ஒரு விழுக்காடு குறைந்தாலும், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதே அளவிற்கு, டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்