விமானக் கட்டணங்கள் 20-25% குறைப்பு

திங்கள், 6 டிசம்பர் 2010 (14:02 IST)
மத்திய அரசின் வான் வழி போக்குவரத்து அமைச்சகம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் விளைவாக உள்நாட்டு விமானக் கட்டணங்களை 20 முதல் 25 விழுக்காடு வரை விமான நிறுவனங்கள் குறைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

விடுமுறைக் காலத்தில் பெருகிய பயணிகள் எண்ணிக்கையை பயன்படுத்திக் கொண்டு 200 முதல் 300 விழுக்காடு வரை பயணிகள் கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள், தற்போது 20 முதல் 25 விழுக்காடு வரை குறைத்திருந்தாலும், கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இன்னமும் அதிகமாகத்தான் உள்ளது என்று பயணிகள் கூறியுள்ளனர்.

மும்பை - டெல்லி மார்க்கத்தில் பொருளாதார வகுப்பிற்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையும், சென்னை - டெல்லி, கொல்கட்டா - டெல்லி மார்க்கத்தில் ரூ.5,000 மதுல் 15,000 வரையும் உயர்த்தி கொள்ளை இலாபம் பார்த்துள்ளன விமான நிறுவனங்கள். இதில் ஏர் இந்தியாவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானக் கட்டங்களை நிர்ணயிப்பது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுடன் வான் வழி போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்