விமானக் கட்டண உயர்விற்கு அரசு எதிர்ப்பு! நிறுவனங்களுடன் பேசு முடிவு
சனி, 4 டிசம்பர் 2010 (15:22 IST)
விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள வான் வழி போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் பட்டேல், விமானக் கட்டணங்கள் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விமான பயணக் கட்டணங்களை ஏர் இந்தியாவும், தனியார் விமான நிறுவனகங்களும் கடந்த சில வாரங்களில் 200, 300 விழுக்காடு உயர்த்தி கொள்ளை இலாபம் அடித்துவந்தன. அரசு, தனியார் விமான நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடத்திய இந்த கூட்டுக் கொள்ளை விமானப் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக விமான போக்குவரத்தை முறைபடுத்தும் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு (Director General of Civil Aviation - DGCA) ஏராளமான புகார்கள் குவிந்தன.
இதில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதை இரத்து செய்தது. வான் வழி போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் பட்டேல் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விமான நிறுவனங்கள் அளித்த கட்டண உயர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று கூறி அமைச்சர் பிரஃபுல் பட்டேல் நிராகரித்துள்ளார். விமான நிலையங்கள் அளித்த அந்த திட்டத்தின்படி, டெல்லி- பெங்களூர், டெல்லி- கொல்கட்டா பயணத்திற்கு ரூ.40,000 கட்டணம் வசூலிப்பது என்று கூறயப்பட்டிருந்தது. இதனால் பேச்சுவார்த்தை முறிந்தது.
இன்று மீண்டும் விமான நிறுவனங்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய வான் வழி போக்குவரத்து அமைச்சகத்தின் செயலர் நசிம் ஜய்தி தலைமையில் ஆன குழு விமான நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
விமான நிறுவனங்கள் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்வதில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என்று கூறிய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், அதே நேரத்தில் அவர்கள் விடுமுறைக் காலத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாறுமாறாக கட்டணத்தை உயர்த்தும்போது அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார்.