பருத்தி, பருத்தி நூல் ஏற்றுமதியை நிறுத்துக: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
வியாழன், 2 டிசம்பர் 2010 (16:08 IST)
உள்நாட்டுத் தேவைக்கு போதுமான அளவிற்கு பருத்தி கிடைக்காத நிலையில், கச்சா பருத்தி, பருத்தி நூல் ஆகியவற்றின் ஏற்றுமதி தொடர்வது ஜவுளித் தொழிலையும், அதைச் சார்ந்து வாழும் தொழிலாளர்களையும் பாதிக்கிறது என்பதால் இவைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
உள் நாட்டில் நிலவும் பருத்தித் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முதல்வர், அதற்குப் பிறகும், 55 இலட்சம் பொதிகள் பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
நூற்பாலைகளுக்குத் தேவையான அளவிற்கு பருத்தி கிடைக்காத நிலையில், பருத்தி ஏற்றுமதி தொடர அனுமதித்தின் விளைவாக பருத்தி விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும், இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழிலில் தான் மிக அதிகமான, சற்றேறக்குறைய 50 இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் பருத்தி சாகுபடி முடிந்து சந்தைக்கு வருகை அதிகரிக்கும் என்பதால் விலை சீராக இருக்குமென்றும், இந்த ஆண்டு ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட காரணத்தினால்தான் பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் காரணமாக விலைகள் உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
தனது நாட்டின் பருத்தித் தேவையை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள மொத்தி தேவையில் 33 விழுக்காடு பருத்தியை குறைந்தபட்ச இருப்பாக சீனா வைத்துள்ளது என்றும், ஆனால், இந்தியாவில் 17 விழுக்காடு மட்டுமே குறைந்த பட்ச இருப்பு வைக்கப்படுகிறது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இதேபோல் பருத்தி நூல் ஏற்றுமதிக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் நெசவாலைகளுக்குத் தேவையான நூல் கிடைக்காமல், அதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், எனவே பருத்தி நூல் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கருணாநிதி பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கடந்த வாரமே, தென் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஜவுளித் துறையின் அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாநிதி மாறன்தான். ஆயினும், பருத்தி, பருத்தி நூல் ஏற்றுமதி தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.