இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி மூவாயிரம் லட்சம் டன்னுக்கும் அதிகமாக இருக்கும். இது சென்ற வருட உற்பத்தியை விட 10 விழுக்காடு அதிகம் என்று தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குநர் வினய் குமார் கூறுகையில், 2010-11 சர்க்கரை பருவத்தில் 3,000 லட்சம் டன்னுக்கும் அதிமாக கரும்பு உற்பத்தி இருக்கும். சென்ற வருடம் கரும்புக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
அத்துடன் புதிய ரக கரும்பும் நடவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ரக கரும்பு அதிக அளவு நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹெக்டேருக்கு 55 டன் கரும்பு உற்பத்தியாகிறது. புதிய ரக கரும்பு ஹெக்டேருக்கு 65 டன் வரை உற்பத்தியாகும் என்று வினய் குமார் கூறினார்.
சென்ற வருடம் 2,740 லட்சம் டன் கரும்பு உற்பத்தியானது.