ஜனவரியில் ஏற்றுமதி அதிகரிப்பு

செவ்வாய், 2 மார்ச் 2010 (17:12 IST)
பொருளாதார நெருக்கடியின் காரணமாக குறைந்திருந்த ஏற்றுமதி, ஜனவரி மாதத்திலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து மூன்று மாதமாக அதிகரித்துள்ளது. ஜனவரியில் மட்டும் ஏற்றுமதி 11.5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இந்த ஜனவரியில் 14.34 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற வருடம் ஜனவரியுடன் ஒப்பிடும் போது 11.5 விழுக்காடு அதிகம். ( சென்ற ஜனவரி 12.86 பில்லியன் டாலர்.)

அதே நேரத்தில் தொழில் துறை, வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக வர்த்தக பற்றாக்குறை 10.36 பில்லியன் டாலராக ( ஏற்றுமதிக்கும்-இறக்குமதிக்கும் இடையே உள்ள வேறுபாடு ) அதிகரித்துள்ளது. ( சென்ற ஜனவரி 5.3 பில்லியன் டாலர்.)

அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் 2008 டிசம்பரில் இருந்து குறைந்து இருந்தது. தற்போது ஜனவரியுடன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இதில் இருந்து பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவது தெரிகிறது.

இந்த ஜனவரியில் மட்டும் 24.70 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 35.5 விழுக்காடு அதிகம். ( சென்ற ஜனவரி 18.22 பில்லியன் டாலர்.)

வெப்துனியாவைப் படிக்கவும்