ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் நிதி திரட்ட 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது.
ஐ.எம்.எப் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. இதன் நிதி ஆதாரம் குறைந்துள்ளதால், சென்ற வருடம் செப்டம்பரில் 403.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிகளுக்கு 212 டன் தங்கத்தை விற்பனை செய்து விட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. ஸ்ரீலங்கா உட்பட மற்ற நாட்டு ரிசர்வ் வங்கிகள் 12 டன் தங்கத்தை வாங்கின.
தற்போது 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது. இவை சர்வதேச தங்க சந்தையில் பாதிப்பு ஏற்படாமல், படிப்படியாக பகிரங்க முறையில் விற்பனை செய்யப்படும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.