பாரமவுண்ட் ஏர்வேஸ் வடகிழக்கு மாநிலங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்துகிறது
திங்கள், 13 ஏப்ரல் 2009 (15:41 IST)
பாரமவுண்ட் ஏர்வேஸ் சென்னையில் இருந்து கொல்கத்தா, கவுகாத்தி, அகர்தலாவுக்கு விமானத்தை இயக்க உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு குறைந்த அளவு பயணிகள் விமான போக்குவரத்து உள்ளது. இந்த குறையை நிறைவு செய்யும் வகையில், கோவையைச் சேர்ந்த பாரமவுண்ட் ஏர்வேஸ், இந்த மாதம் கடைசி வாரம் முதல் சென்னையில் இருந்து கொல்கத்தா, அஸ்ஸாம் மாநில வர்த்தக தலைநகரான கவுகாத்தி, திரிபுராவின் தலைநகரான அகர்தலா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை துவக்க உள்ளது.
இதில் கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் வாசல் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாரமவுண்ட் ஏர்வேஸ் கொல்கத்தாவில் இருந்து கவுகாத்திக்கும், கவுகாத்தியில் இருந்து அகர்தலா, கொல்கத்தாவில் இருந்து அகர்தலா, சில்சார், திபுரக் ஆகிய சிறு நகரங்களுக்கும் விமான சேவை இயக்க ஆவலாக உள்ளதாக இதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில், பாரமவுண்ட் ஏர்வேஸ் ஏற்கனவே இந்தியாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நகரங்களுக்கு விமான சேவையை இயக்குகிறது.
இதன் நோக்கம் அடுத்த சில வருடங்களில் வடஇந்தியா, வட-கிழக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமானத்தை இயக்குவதே என்று தெரிவித்தனர்.
பாரமவுண்ட் ஏர்வேஸ் இயக்கும் விமானங்களின் எல்லா இருக்கைகளும் பிசினஸ் கிளாஸ் எனப்படும் வகையை சேர்ந்தவை. முதல் வகுப்பு போன்ற பிரிவுகள் இல்லை.