வங்காளதேசம் வர்த்தக ஒப்பந்தம்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:00 IST)
வங்காளதேசத்தின் புதிய பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடன் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீடு அதிகரிப்பு, வர்த்தக பாதுகாப்பு ஆகியவைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்தியா-வங்காளதேசத்திற்கு இடையே 1980 ஆம் ஆண்டில் வர்த்தக உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்நாட்டில் அடிக்கடி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இந்த வர்த்தக உடன்படிக்கை செயல்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இவர் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

வங்கதேசத்தின் அமைச்சரவை கூட்டம் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நேற்று நடந்தது. இதில் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு அதிகரிப்பு, வர்த்தக பாதுகாப்பு, எல்லை வழியாக வர்த்தகம் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் வங்கதேசத்திற்கு வருகின்றார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஷேக் ஹசீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் நலன் கருதியும், நாட்டு மக்களின் நலன் கருதியும் அரசு, இது மாதிரியான பல உடன்படிக்கைகளை செய்து கொள்ள தயாராக இருக்கிறது என்று கூறினார்.

இந்த உடன்படிக்கையால், இந்திய நிறுவனங்கள் வங்காளதேசத்தில் முதலீடு செய்ய முடியும். அதே போல் வங்காளதேசத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வழிவகுக்கும்.

வங்கதேசம் விடுதலை அடைந்தவுடன், 28 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேச ஜனாதிபதி ஜுயாவுர் ரஹ்மான், புது டெல்லிக்கு வருகை புரிந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு நீர் வழி, சாலை, ரயில்வே போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தற்போது பாகிஸ்தானுடன், இந்தியா சாலை, ரயில் வழியாக வர்த்தகம் செய்து வருகிறது.

இதே போல் இந்தியாவுடன், வங்கதேசம் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று இரு நாடுகளிலும் உள்ள தொழில், வர்த்தக துறையினர், பொதுமக்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியுடன் கையெழுத்தாகும் உடன்படிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்