பொள்ளாச்சி : ஆனைமலை வட்டாரத்தில் புதிய ஆயக்கட்டுப் பாசனத்தில் மக்காச் சோளம் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மை துறை கூறியுள்ளது.
கோழி தீவனம் தயாரிக்க அதிக அளவு மக்காச் சோளம் தேவைப்படுகிறது. இதுவரை தமிழகத்திற்கு தேவையான மக்காச் சோளம் மத்திய பிரதேசம், கர்நாடாக, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வாங்கச் படுகிறது. மக்காச் சோளத்திற்கு உள்நாட்டில் விற்பனை வாய்ப்பு இருப்பதுடன், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஆனைமலை பகுதியில் மக்காச் சோளம், நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்யும் படி வேளாண்மை துறை கூறியுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.மோகன்ராஜ் சாமுவேல் வெளியிட்ட செய்திகு குறிப்பில், ஆனைமலை வட்டாரப் பகுதியில் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனப் பரப்பில் சுமார் 50 விழுக்காடு பகுதிகளில் தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகள் தென்னை மரங்களுக்குப் பாசனத் தண்ணீரை மிகுந்த சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் ஏற்கெனவே நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்துள்ளவர்கள் நிலக்கடலை சாகுபடி செய்யலாம். தலைமடையில் உள்ள நிலத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் கடைமடையில் பாசனத்துக்குத் தேவைக்கேற்பத் தண்ணீர் கிடைப்பதில்லை. கடைமடைப் பகுதி விவசாயிகள் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு தோட்டக் கலைப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். தட்டைப் பயிர் மற்றும் உளுந்துப் பயிர் ஆகியவற்றைச் சாகுபடி செய்யலாம். இத்துடன் இது மக்காச் சோளம் பயிரிட ஏற்ற காலம். சோளப் பயிரிலும் வீரிய ரகத்தைப் பயிரிட்டால் அதிக மகசூல் எடுக்கலாம். கிடைக்கும் தண்ணீரில் மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.