சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்!
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (18:34 IST)
மும்பை: அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சோயா எண்ணைக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும். அத்துடன் சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்த சங்கம் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக அமைச்சர் கமல்நாத் மற்றும் விவசாய அமைச்சர் சரத்பவார் ஆகிய மூன்று பேருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
அதில் உலக சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. எனவே அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
கரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை, சோயா விலை குறைந்து வருகிறது. இதன் விலை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையை விட குறைந்து வருகிறது.
இந்த விலை குறைப்பை தடுத்து நிறுத்தவும், இதற்கு நியாயமான விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
2006 ஆம் ஆண்டில் இருந்த அளவு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிக எண்ணெய் வித்து உற்பத்தி, பாமாயில் இருப்பு போன்ற காரணங்களினால், சர்வதேச அளவில் சமைய்ல எண்ணெய் விலை குறைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு இறக்குமதி வரியில் மாற்றம் செய்வதுடன், ஏற்றுமதிக்கு உள்ள தடையையும் நீக்க வேண்டும். அத்துடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எண்ணெய் வித்துக்கள் இருப்பு வைக்க உள்ள அதிக பட்ச அளவையும் நீக்க வேண்டும். இதனால் விவசாயிகளிடமிருந்து அதிக அளவு எண்ணெய் வித்து வாங்க முடியும்.
சோயா எண்ணெய் முன்பேர சந்தைக்கு உள்ள தடையையும் நீக்க வேண்டும் என்று இந்த சங்கத்தின் தலைவர் அசோக் சேத்தியா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.