பரஸ்பர நிதிகளுக்கு கடன்-ரிசர்வ் வங்கி!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (12:30 IST)
மும்பை: பரஸ்பர நிதிகளுக்கு (மியூச்சுவல் பண்ட்) உதவி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி குறுகிய கால கடன் வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சரிந்ததால், இதில் முதலீடு செய்துள்ள பரஸ்பர நிதி நிறுவனங்களில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டது.

இதன் யூனிட்டுகளை வாங்கியிருப்பவர்கள் எந்நேரமும் யூனிட்டுகளை விற்பனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில், இவை ரொக்கமாக பணத்தை வைத்துக் கொண்டன. இதனால் இவற்றின் பங்குச் சந்தை முதலீடும் குறைந்தது.

இவற்றை கருத்தில் கொண்டு பரஸ்பர நிதிகளின் பணப்புழக்கம் பாதிக்கப்படாமல் இருக்கவும், யூனிட்டுகளை விற்பனை செய்பவர்களுக்கு பணம் கொடுக்க ரிசர்வ் வங்கி ரூ.20 ஆயிரம் கோடி குறுகிய கால கடனாக வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, 14 நாட்களுக்கான குறுகிய கடன் வழங்கப்படும். இதற்கு வருடத்திற்கு 9 விழுக்காடு வட்டி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்