குஜராத்தில் நானோ தொழிற்சாலை!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (11:56 IST)
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அமையும் என்று தெரிகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை, குஜராத்திற்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ள குஜராத் மாநில அரசு உயர் அதிகாரிகள் கூறுகையில், டாடா மோட்டார் நிறுவனத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் வழங்க தயாராக உள்ளோம். இதில் 80 விழுக்காடு நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்று தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து டாடா நிறுவன அதிகாரிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த கார் தொழிற்சாலை அமைக்கும் அறிவிப்பை முதல்வர் நரேந்திர மோடி, டாடா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் ஏற்பட்ட நிலப்பிரச்சனையால், டாடா மோட்டார் நிறுவனம் அங்கிருந்து வெளியேறியது. இதற்கு பிறகு கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்பட சில மாநிலங்கள் நானோ கார் தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதற்கு விருப்பத்தை தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்