வரி உயர்வை குறைக்க வியாபாரிகள் வேண்டுகோள்!

சனி, 27 செப்டம்பர் 2008 (11:57 IST)
வணிகக் கட்டடங்களுக்கு சொத்து வரி உயர்வை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் புதிய சொத்து வரி சீரமைப்பு, அனைத்துத் தரப்பு மக்களையும் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம் என பல வகைகளிலும் இன்னல்கள் அடைந்துள்ள தமிழக மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் சொத்து வரி சீரமைப்பு அமையக்கூடாது என குறிப்பிட்டிருந்தோம்.

மாநகராட்சி கடைகள், நிறுவனங்களுக்கு சொத்து வரி 150 விழுக்காடு உயர்த்தியுள்ளது. இது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

இந்த வரி உயர்வை பொறுப்பேற்கும் வணிக நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலை உயர்வு, பொதுமக்களின் நிதிப்பளுவை அதிகரிக்கும்.

எனவே, மக்களின் துன்பங்களை நீக்கும் வகையில் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 10 சதவீதம், வணிகக் கட்டடங்களுக்கு 50 சதவீதம் என்ற அளவில் வரி உயர்வை திருத்தி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கெளரவச் செயலாளர் பி.சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்