நெல் கொள்முதல் ஈரப்பதம் அதிகரிப்பு!

சனி, 27 செப்டம்பர் 2008 (11:40 IST)
விவசாயிகளிடம் இருந்து 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 2007-08 ஆம் ஆண்டு குறுவை அறுவடைப் பருவத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை அரசு 17 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதித்து இருந்தது.

இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதில் மிகுந்த சிரமம் இருப்பதாக விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கூறினார்கள். ஈரப்பத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரீசிலனை செய்து, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது நிர்ணயித்துள்ள ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடையுமாறு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்