பணவீக்கம் இரண்டு இலக்கத்தில் இருக்கும் என்று புள்ளியல் துறை தலைமை அதிகாரி பிரணாப் சென் கூறியுள்ளார்.
புதுடெல்லியில், நேற்று புள்ளியல் துறை தலைமை அதிகாரியும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளருமான பிரணாப் சென் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜனவரி மாதம் வரை பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்திலேயே இருக்கும்.
பணவீக்கத்தை கணக்கிட அடிப்படையாக கொள்ளும் வருடம் காரணமாகவே பணவீக்கம் இரண்டு இலக்கில் இருக்கும்.
உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. இனி வரும் மாதங்களில் உருக்கு, பெட்ரோலிய கச்சா எண்ணெய் போன்றவைகளின் விலை குறையும். மே மாதத்தில் இருந்து பல பொருட்களின் விலை அதிகரிக்காமல் நிலையாக உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
பணவீக்கத்தை வாரத்திற்கு ஒரு முறை கணக்கிடுவது சரியல்ல. மற்ற துறைகளின் புள்ளி விபரங்கள் மாதத்திற்கு ஒரு முறையே வெளியிடப்படுகிறது. மொத்த விலை குறியீட்டு எண் ஒட்டு மொத்த பொருளாதார அளவை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். நம்மிடம் வாரத்திற்கு ஒருமுறை விலை விபரங்களை திரட்டும் அமைப்பு இல்லை. எனவே துல்லியமாக பணவீக்கத்தை கணக்கிட முடியாது என்று சென் தெரிவித்தார்.