திருச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்படும் 10 நாள் புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.
திருச்சி ரோட்டரி சங்கம் சார்பில் 1987 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கடந்த 21 ஆண்டுகளாகப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்க ஆண்டு புத்தககாட்சி நாளை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடை பெறுகிறது.
தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தொடக்கிவைக்க உள்ளார். திருச்சி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீ. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கின்றார்.
இந்தக் கண்காட்சியில் 75 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட பிரபல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்கவுள்ளனர். அனைத்து வகையான தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள், சி.டி.க்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.
இது வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் பகல் 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
புத்தக கணகாட்சி நடைபெறும் அரங்கில் தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இத்துடன் வேலை தேடுவோர் மற்றும் வேலைக்கு தகுந்த ஆள் தேடுவோர் முயற்சிகளைச் சுலபமாக்கும் வகையில், விண்ணப்பப் படிவம் கொடுக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிறைவு செய்து அங்குள்ள பெட்டிகளில் போட்டு விடலாம்' என கண்காட்சி தலைவர் சங்கரன், திருச்சி ரோட்டரி சங்கத் தலைவர் பி. மோகன், செயலர் எஸ். சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.