அந்நிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பளிப்பது அரசின் கடமை என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.
லண்டனுக்க வந்துள்ள தேஷ்முக், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சமீபத்தில் நொய்டாவில், கஜியானோ என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொழிலாளர்களால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து சராமாரியாக கேள்விகள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தேஷ்முக், இந்தியாவில் முதலீடு செய்யும் எல்லா அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், நாங்கள் உதவி செய்து, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தொழில் அமைதி நிலவுவதை பற்றி குறிப்பிட்டு பேசிய தேஷ்முக், மகாராஷ்டிராவில் அதிக அளவு அந்நிய முதலீட்டாளர்கள் உள்ளனர். அதிக அளவு அந்நிய கூட்டு நிறுவனங்களும் உள்ளன. இங்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அரசு தலையிட்டு தீர்த்து வைக்கும்.
இந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்த மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர், தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியே, தாக்குதல் நடக்கவும், தலைமை நிர்வாக அதிகாரி இறக்க காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்று தேஷ்முக் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள இந்திய தூதர் (ஹை கமிஷனர்) சிவ் சங்கர் முகர்ஜி பேசுகையில், நொய்டாவில் நடந்த சம்பவத்தை யாரும் ஆதரிக்கவில்லை. இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று கூறினார்.