உத்தர பிரதேச மாநில அரசின் வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் இரண்டாவது நாளாக கடை அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
உத்தர பிரதேச மாநில அரசு மளிகை பொருட்களின் மீதான மதிப்பு கூட்டு வரியை நான்கு விழுக்காட்டில் இருந்து 12.5 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் நேற்று முழுநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினார்கள், இன்று பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் குறித்து உத்தர பிரதேச மளிகை வியாபாரிகள் சங்க (Uttar Pradesh Kirana Merchants Assocation) தலைவர் நாவல் கன்னா கூறுகையில், மாநில அரசு மளிகை பொருட்களின் மீது மதிப்பு வரியை அதிகரிப்பதால் வியாபாரிகள் மட்டும் அல்லாமல், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கான்பூரில் லாடக் சாலையில் உள்ள சந்தைக்கு அருகே வணிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
பாரதீய ஜனதா கட்சியின் வணிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாநில அரசின் முடிவை கண்டித்து, போல் பக் அருகில் உள்ள காந்தி திருவுருவச் சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்