இணையதளத்தில் வணிக வரி படிவங்கள் தாக்கல் செய்யலாம்!
திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:21 IST)
மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின்கீழ் வணிக வரித் துறைக்குச் செலுத்தும் அனைத்து மாதாந்திரப் படிவங்களையும் வணிகர்கள் இணையதளம் மூலமாகச் சமர்ப்பிக்கலாம்.
இணையதளம் வழியாக மாதாந்திரப் படிவங்கள் தாக்கல் செய்வது குறித்த விவரங்கள் www. tnvat. gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இணையதளம் மூலம் படிவங்கள் தாக்கல் செய்வது குறித்து பயிற்சி பெற விரும்பும் வணிகர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரி அலுவலக வளாக மத்திய கணிப்பொறி மையம் அல்லது மாவட்டங்களில் உள்ள வரிவிதிப்பு அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின்கீழ் வரியினங்களை மாதாந்திர படிவங்கள் ஐ.ஜே.கே.எல் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்கு சமர்ப்பிக்கவில்லையெனில் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும்.
வணிகர்கள் மாதாந்திர படிவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யா விட்டால் வணிகர்களின் பதிவுச் சான்று ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முந்தைய காலாண்டில் அயல்மாநில கொள்முதல், விற்பனை குறித்த விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
வரிஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை படிவங்களைப் பெறுவதற்கான விண்ணப்பம், வரி திரும்பப் பெறுவதற்கான படிவம் ஆகியவற்றை இணையதளத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று வணிக வரித் துறை கோவை மண்டல இணை ஆணையாளர் பு.ஏகாம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.