தொடர் மின்வெட்டால் ஜமக்காளம் உற்பத்தி பாதிப்பு!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (11:17 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டால் ஜமக்காளம் உற்பத்தி செய்யும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஜமக்காளம் உற்பத்திக்கு பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையான ஜமக்காளங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது மட்டுமின்றி அய‌ல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்னிமலைப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட விசைத்தறிகளின் மூலம் ஜமக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஜமக்காளங்கள் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான மின்வெட்டின் காரணமாக தடைபட்டுள்ளது.

கடந்த காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நேரத்தை விட ஐந்து நாட்கள் தற்போது கூடுதலாக தேவைப்படுவதால் உற்பத்தி குறைந்துள்ளது. அதே சமயத்தில் இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் கூலியில் குறைவு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்