நிதி நெருக்கடி தொடரும்- சர்வதேச நிதியம்!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (16:10 IST)
உலக அளவில் பொருளாதார நெருக்கடி தொடரும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான லேக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங் (Lehman Brothers) நேற்று திவாலா தாக்கீது கொடுத்தது.

இதே போல் மற்றொரு முதலீட்டு நிதி நிறுவனமான மெரில் லாஞ்ச் (Merrill Lynch) கடுமையான நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிவித்தது. இதை பாங்க் ஆப் அமெரிக்கா வாங்கி கொள்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.ஐ.ஜி [American International Group (AIG)] நிறுவனம் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், இதை சமாளிக்க சொத்துக்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக நேற்று பகிரங்கமாக அறிவித்தன.

இந்நிலையில் ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியத்தின் மூத்த உதவி மேலாண்மை இயக்குநர் ஜான் லிப்ஸ்கி கூறுகையில், இந்த நெருக்கடிகளால் சில காலம் நிதி சந்தையில் நிலையில்லாதன்மை ஏற்படும். அத்துடன் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

லேக்மான் பிரதர்ஸ் நேற்று ரியல் எஸ்டேட் துறையில் கொடுத்த கடன்கள் காரணமாக 60 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிவித்தது.





வெப்துனியாவைப் படிக்கவும்