காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதற்கு, அந்தத் துறையின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொது காப்பீடு நிறுவனத்தின் மதுரை மண்டல ஊழியர் சங்கம், காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடாக உயர்த்த அனுமதிக்கும் முடிவைக் கைவிடுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்த ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் குழு செயலாளர் ஜமுனா ராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 விழுக்காட்டில் இருந்து, 49 விழுக்காடாக உயர்த்துவதை கைவிட வேண்டும்.
நியு இந்தியா அஷ்யூரன்ஸ். நேஷனல் இன்ஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் ஆகிய நான்கு பொது காப்பீடு நிறுவனங்களையும் மத்திய அரசு ஒன்றாக இணைக்க வேண்டும்.
பதவி உயர்வை எவ்வித தாமதமும் இன்றி அமல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும்.
விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றதால் ஏற்பட்டுள்ள காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.