மின்வெட்டை கண்டித்து வணிகர்கள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (09:46 IST)
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டை கண்டித்து வணிகர்கள் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வை ஆகியவற்றை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறுகையில், மின்வெட்டை ரத்து செய்யக் கோரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைத்து, தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்யக் கோரியும், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்தும் இந்த போராட்டத்தை நடத்துகின்றோம்.
அதிகாலை முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். இந்த போராட்டத்தில் 25 லட்சம் வணிகர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
வணிகர் சங்கங்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க., மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ்
போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், பாண்டிபஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முழு அடைப்பால் சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், திருவொற்றியூர், புழல், கொளத்தூர், ரெட்ரேரி பகுதிகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் களை இழந்து காணப்படுகிறது.
இதேபோல் தமிழகம் முழுவதும் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.