சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்: ரிசர்வ் வங்கி உத்தரவு!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (10:42 IST)
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக சிறு மற்றும் நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அவைகளுக்கு போதிய நிதி வசதியும், கடன்களும் கிடைக்காததே. இதைக் கருத்தில் கொண்டு இந்த பிரிவு தொழில் நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவி அளிக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

சிறு தொழில் பிரிவில் உள்ள தொழிற் சாலைகளின் செயல்பாடுகளை உரிய முறையில் ஆய்வு செய்து, அதற்கேற்ப இவைகளுக்கு கடனுதவிகளை வழங்க வேண்டும். இவற்றின் மேம்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவில் கடந்த 10 ஆண்டுகளாக சிறு மற்றும் நடுத்தர பிரிவில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் அளித்து வந்த நிதி உதவிகள் கணிசமாகக் குறைந்துள்ளதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

1990-91-ம் ஆண்டுகளில் சிறிய நிறுவனங்களுக்கு அளித்து வந்த கடன், மொத்த கடனில் 15.1 விழுக்காடாக இருந்தது. தற்போது 6.5 விழுக்காடாக குறைந்துவிட்டது.

சிறுதொழில்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைக் கடனும் 17.9 விழுக்காடாக குறைந்துவிட்டது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு 43.6 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் வங்கிகள் வழங்கும் வீட்டு வசதி கடன், நுகர்வோர் பொருள் கடன் அளவு அதிகரித்துள்ளது. இவை 1990 ஆம் ஆண்டுகளில், மொத்த கடனில் 6.4 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 22.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

வங்கிக் கடன் அதிகரிப்பால் பெரிய நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறை மட்டுமே பயனடைந்துள்ளன. அதே நேரத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறுதொழில் மற்றும் விவசாயத் துறைக்கு அதிக அளவில் கடன் அளிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்