இரும்பு தாது ஏற்றுமதி வரியை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பதாக மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் நேற்று மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் கார்ப்பரேஷன் சார்பில் உடன் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரும்பு தாது ஏற்றுமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக அதிகரிக்கும் படி பரிந்துரைத்துள்ளோம்.
இப்போது இந்த பரிந்துரை நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், உள்நாட்டு தேவைகள் நிறைவேறும் வரை 62 விழுக்காட்டிற்கும், அதற்கும் அதிகமாக இரும்பு உலோகம் உள்ள உயர்ரக தாது ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
உருக்கு, இரும்பு பொருட்களின் விலை குறையுமா என்று கேட்டதற்கு, உருக்கு, இரும்பு விலை குறையும் என்று தெரிவித்த பஸ்வான், எப்போது குறையும் என்று தெரிவிக்க இயலாது என்றார்.
ஆகஸ்ட் மாதம் உருக்கு உற்பத்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களின் இலாபம் குறித்து பரிசீலனை செய்துள்ளோம். அத்துடன் உலக சந்தையிலும் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு எவ்வித காரணமும் இல்லை.
இந்த நிறுவனங்களின் இலாபம் 15 விழுக்காடுக்கும் மேல் இருக்கும் போது, விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? என்று பஸ்வான் கேட்டார்.
சிங்கூர் பிரச்சனை பற்றி கருத்து தெரிவிக்கும் போது, தொழிற்சாலைகளும் வேண்டும். அதே நேரத்தில் விவசாயிகளும் பாதிக்கப்பட கூடாது. தொழில், விவசாயம் இரண்டும் அவசியம் என்று கூறினார்.