இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அணு சக்தி வர்த்தகம் செய்வோம்: அமெரிக்கா!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:32 IST)
இந்தியச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அணு சக்தித் தொழில்நுட்ப வர்த்தகத்தை உறுதி செய்வதற்காகத்தான் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
மேலும், இந்தியாவை அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி.) முழு உறுப்பினராக ஆக்குவதே தனது அடுத்த இலக்கு என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து, தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்காவின் பொருளாதார விவகாரத்துறை துணை அமைச்சர் டேவிட் போஹிஜியன், "அமெரிக்க நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை உறுதி செய்வதற்காக ஹைட் சட்டத்தை உருவாக்கிய அமெரிக்க நிர்வாகம், அதன் ஒரு பகுதியான 123 ஒப்பந்தத்திற்கு காங்கிரசின் ஒப்புதல் பெற முயற்சித்து வருகிறது" என்றார்.
மேலும், "என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவர அதிபர் ஜார்ஜ் புஷ், அயலுறவு அமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமெரிக்க நிர்வாகமும் கடுமையாகப் பணியாற்றியுள்ளது. இந்தியாவை என்.எஸ்.ஜி.யின் முழு உறுப்பினராக ஆக்குவதே அமெரிக்காவின் அடுத்த இலக்கு." என்றார் அவர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் முக்கியப் பங்காற்றப் போகிறது என்றும், 2020க்குப் பிறகு இந்தியாவின் வளர்ச்சி அணு சக்தி தொழில்நுட்பம் சார்ந்துதான் அமையப்போகிறது என்றும் போஹிஜியன் கூறினார்.