ஆர்பிஐ-க்கு புதிய ஆளுநர் டி.சுப்பாராவ்

வியாழன், 4 செப்டம்பர் 2008 (13:45 IST)
மத்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) புதிய ஆளுநராக நிதித்துறை செயலாளர் டி. சுப்பாராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆர்பிஐ ஆளுநராக இருக்கும் ஒய். வேணுகோபால ரெட்டி (Yega Venugopal Reddy) வரும் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதையொட்டி புதிய ஆளுநராக சுப்பா ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், சுப்பாராவ் நியமனத்தை அறிவித்தார்.

59 வயதான சுப்பாராவ் 1972ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர். மத்திய அரசின் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது நிதித்துறை செயலாளராக உள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆர்பிஐ ஆளுநர் பதவியில் சுப்பாராவ் இருப்பார் என்று கூறிய நிதியமைச்சர், தேவைப்பட்டால் அவரது பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்றார்.

ஒஹியோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.எஸ். பட்டமும் பெற்றுள்ளார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

கடந்த 1990 முதல் 1993 ஆம் ஆண்டு வரை பொருளாதார விவகாரங்கள் துறையில் இணைச் செயலாளராக பதவி வகித்துள்ளார். ஆந்திர மாநில அரசின் நிதித்துறை செயலாளராக 1993 - 98ஆம் வரை பதவி வகித்த அவர், உலகவங்கியின் முன்னணி பொருளாதார வல்லுநராக 2004ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயலாளராக இருந்த சுப்பாராவ், கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி முதல் நிதித்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

தற்போது பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இடையே ஆர்பிஐ-யின் தலைமைப் பொறுப்பை சுப்பாராவ் ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்