பிரபல தொழிலதிபர் கே.கே.பிர்லா காலமானார்.

சனி, 30 ஆகஸ்ட் 2008 (13:00 IST)
பிரபல தொழிலதிபரும், மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான கிருஷ்ண குமார் பிர்லா, இன்று காலை 7.30 மணியளவில் கொல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த பதினைந்து தினங்களாக உடல் நலம் இன்றி இருந்த கே.கே.பிர்லா, இன்று கொல்கட்டாவில் உள்ள பிர்லா பார்க் இல்லத்தில் காலமானார்.

இவர் மனைவி மனோரமா தேவி, ஒரு மாதத்திற்கு முன்பு தான் காலமானார்.

இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட, பிர்லா தொழில் குழுமங்ளைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களுக்கு தலைவராக இருந்தார்.

இவருக்கு நந்தினி ரூபானி, ஷோபனா பார்தியா, சரோஜ் பொத்தாதர் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தார். இவரின் தகப்பனார் பெயர் குன்ஷியாம் தாஸ் பிர்லா.

கே.கே.பிர்லா சர்க்கரை, உரம், இரசாயணம், கனரக இயந்திரங்கள் தயாரிப்பு, ஜவுளி, கப்பல் போக்குவரத்து, செய்தி பத்திரிக்கை உட்பட பல தொழில் நிறுவனங்களை தொடங்கி, திறம்பட நடத்தி வந்தார்.

இத்துடன் இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிலையமான பிலானியில் அமைந்துள்ள பிர்லா இன்ஷ்டியூட் ஆப் டெக்னாலஜியை நிறுவியதுடன், அதன் கிளைகள் துபாய், கோவா, ஹைதராபாத்தில் துவங்கவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அத்துடன் 1961ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 18 வருடங்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இவருக்கு பாண்டிச்சேரி பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்தது.

இந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி), இந்திய வர்த்தக சங்கம் உட்பட பல அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்