அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகத்தை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி அன்மையில் தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தை, மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச் ஆகியவைகளுக்கு அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகம் நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது.
இது முதன் முதலாக தேசிய பங்குச் சந்தையில் இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த பங்குச் சந்தையில் நடந்த விழாவில் காலை 8.45 மணிக்கு சிதம்பரம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு, அந்நியச் செலவாணி மதிப்பு மாறுவதால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மத்திய அரசு வட்டி, கடன், நிறுவன கடன் பத்திரங்கள் ஆகியவைகளின் முன்பேர வர்த்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சியாமளா கோபிநாத் பேசுகையில், உலக அளவில் அந்நியச் செலவாணி வர்த்தகம் அதிக அளவு நடக்கும் நாடுகளில் இந்தியா 16வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலவாணி சந்தையில், 2007 ஆம் ஆண்டு 34 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது என்று கூறினார்.
தேசிய பங்குச் சந்தையில், அந்நிய செலவாணி முன்பேர சந்தையில் பங்கு பெற 300 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இப்போது அமெரிக்க டாலருக்கு மட்டும் வர்த்தகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளேயே 8 ஆயிரம் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதில் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கு அதிக அளவு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த வர்த்தகம் இந்திய ரூபாயிலேயே நடைபெறும், அதிகபட்சம் 12 மாதத்திற்கு அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஆயிரம் அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்ய வேண்டும். குறைந்த பட்ச விலை மாறுதல் 25 பைசாவாக இருக்க வேண்டும்.