டாடா மோட்டார்-பணிகள் நிறுத்தம்!

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (15:20 IST)
சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனத்தின் கார் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் டாடா மோட்டார் நிறுவனம் குறைந்த விலையில் நானோ ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது.

இதற்காக கையகப்படுத்தி உள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தில், 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து நிர்ப்பந்தமாக பறிக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகளுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது. இந்த தொழிற்சாலையின் முன்பு இன்று ஆறாவது நாளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலையில் பொறியாளர்கள், மற்ற ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களில் 10 முதல் 15 விழுக்காடு தொழிலாளர்களே வேலைக்கு வந்தனர். குறைந்த அளவு தொழிலாளர்களை வைத்துக் கொண்டு கட்டுமான வேலைகள் செய்ய முடியாது என்பதால், ஒப்பந்த தொழிலாளர்களும் திருப்பி அனுப்பப் பட்டனர்.

இதனால் கார் தொழிற்சாலையின் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இது குறித்து சிங்கூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரசன்ஜூட் சக்கரவர்த்தி கூறுகையில், நேற்று கார் தொழிற்சாலையில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் போது, அவர்கள் சென்ற வாகனம், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. காவல் துறையினர் தலையிட்டு வெளியேற்றினார்கள். இவர்கள் இரவு மிக தாமதமாக வீட்டிற்கு சென்றனர்.

இதனால் காலையில் வேலைக்கு வரமுடியவில்லை. இவர்கள் நண்பகல் அல்லது மாலை ஷிப்டிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

நேற்று பாசிம் பங்கா மஜூர் சமீதி (நில மீட்பு இயக்கம்) திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து கார் தொழிற்சாலையில் இருந்து 300 ஊழியர்களை வெளியே வரமுடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

அத்துடன் கார் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆறு பேருந்துகள், சோஷலிஸ்ட் கட்சி தலைவர் அனுராதா தல்வார் தலைமையில் நடந்த மறியலில் சிக்கிக் கொண்டன.

இவர்களை காவல்துறை தடியடி நடத்தி மறியல் செய்தவர்களிடம் இருந்து மீட்டது.

இந்த சம்பவத்தால் இன்று தொழிற்சாலையின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக பிரசன்ஜூட் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

இந்த தொழிற்சாலை அமைந்துள்ள துர்காபூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்றும் போக்குவத்து பாதிக்தப்பட்டுள்ளது.

இந்த சாலைக்கு மாற்று சாலையான டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கொல்கத்தாவில் இருந்து புர்வான், பிர்கூம், பங்குரா மாவட்டங்களுக்கு உணவு பொருட்கள் உட்பட எந்த பொருட்களும் கொண்டு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுக்கும் வரை சத்தியாகிரக போராட்டம் தொடரும். இந்த போராட்டத்திற்கு கல்லூரி, பள்ளி மாணவர்களிடமும் ஆதரவு திரட்ட போவதாக அறிவித்தார்.

இத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் இன்று முதல் தினசரி மாலை 4 மணிமுதல் ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டத்தையும் நடத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்