சிறிய வெங்காயம் விலை உயரும்-த.வி.ப.

புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
வெங்காயத்தின் விலை அடுத்து வரும் மாதங்களில் கிலோவுக்கு ரூ.2 முதல் 4 வரை உயரும் என்ற தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், விவசாயிகளை சிறிய வெங்காயத்தை இருப்பில் வைத்திருக்குமாறும்,அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கிலோவுக்கு ரூ.2 முதல் 4 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த பல்கலைக் கழகத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை ஆய்வு பிரிவு (Domestic and Export Market Intelligence Cell - DEMIC) வெங்காயம் விலை உயர்வு பற்றி கூறுகையில், பருவமழை தாமதம், ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலையைக் குறைத்தது, கர்நாடாகாவில் இருந்து வரத்து குறைவு போன்ற காரணங்களால் விலை அதிகரிக்கும்.

தமிழகத்தில் பல்லடம், திருப்பூர், பெரம்பலூர், ஈரோடு பகுதிகளில் சிறிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அறுவடை நேரத்தில் மழை பெய்தால், விவசாயிகள் கிலோ ரூ.15 வரை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

தற்போது வெங்காய ரகத்தை பொறுத்து விவாசயிகள் கிலோவுக்கு ரூ.ஆறு முதல் ரூ.11 வரை விற்பனை செய்து வருகின்றனர். கர்நாடாகாவில் இருந்து வரும் வெங்காயம் ஆகஸ்ட் மாதத்துடன் நின்று விடும்.

இதனால் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு விலை 1 கிலோ ரூ.15 என்ற அளவில் இருக்கும் என்று தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்த ஆண்டு (2007/08) 5.28 லட்சம் ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்திருப்பாதாக மதிப்பிட்டுள்ளது. இதில் இருந்து 74.51 லட்சம் டன் (பெரிய, சிறிய வெங்காயம்) உற்பத்தியானதாக கணித்துள்ளது (முந்தை ஆண்டை விட 11 விழுக்காடு அதிகம்). இந்தியாவில் இருந்து 11 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்