வெளிச் சந்தையில் அரிசி, கோதுமை விற்பனை - மத்திய அரசு முடிவு!
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:56 IST)
அரிசி, கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்வது என்று இன்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்து வருகிறது.
இந்த முடிவு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வெளிச் சந்தையில் குறையும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவை பொருளாதார விவகாரக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இதில் அரசின் வசம் உள்ள இருப்பில், கூடுதலாக உள்ள கோதுமை, அரசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதை மாநில அரசுகள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும். மொத்த வியாபாரிகளுக்கு இந்திய உணவு கழகம் பகிரங்க டெண்டர் (விலைப்புள்ளி) மூலம் விற்பனை செய்யும்.
இதை எப்போது விற்பனை செய்வது, அளவு குறித்து விவசாய அமைச்சகம் அறிவிக்கும்.
இப்போது மத்திய அரசு வசம் இருப்பில் உள்ள அரிசி, கோதுமையில் அவசரகால தேவை, பொதுவிநியோகம் உட்பட மத்திய அரசு திட்டங்களுக்கு தேவைப்படும் தானியம் இருப்பில் வைத்துக் கொள்ளப்படும். இதை தவிர கூடுதலாக உள்ளவை மற்றும் பகிரங்க சந்தையில் விற்பனை செய்யப்படும்.