பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ள ஆயில் இந்தியா நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட உள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்நிறுவனம் 2 கோடியே 64 இலட்சம் பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் மாதம் வரை உள்ள வர்த்தக தகவல்களை தயார் செய்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன், பங்கு வெளியீடு அனுமதிக்காக செபியிடம் அடுத்த மாதம் விண்ணப்பிக்க உள்ளது.
பொதுப் பங்கு வெளியிடும் நிறுவனங்கள், அதன் இயக்குநர்களில் பாதி பேர், அந்த நிறுவனத்தை சாராத சுயேச்சை இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்று செபியின் விதிகள் கூறுகின்றன. இதன் படி ஆயில் இந்தியா சுயேச்சை இயக்குநர்களை நியமித்துள்ளது.
இதன் உயர் அதிகாரி பங்கு வெளியீடு பற்றி கூறுகையில், நாங்கள் பங்கு வெளியீட்டு வங்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். பங்குச் சந்தை நவம்பர் மாதத்தில் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் பங்கு வெளியீடு இருக்கும் என்று தெரிவித்தார்.
இதே போல் மற்ற பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் நவம்பர் மாதத்தில் பங்குகளை வெளியிடும் என்று தெரிகிறது.